அரசியல் மேடையில் வண்டு முருகனான நாஞ்சில் சம்பத்.. பூரா பயலும் கோவக்காரனா இருக்கான்..!
விவாத நிகழ்ச்சி மேடையில் பாஜகவினரை தரக்குறைவாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக , ஆவேசமான பாஜகவினர் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு அடிக்க பாய்ந்ததால் அதே மேடையில் தான் சொன்ன விமர்சனத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் நாஞ்சில் சம்பத்...
சினிமா ஒன்றின் காமெடி காட்சியில் வண்டு முருகன் கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கும் வடிவேலு மேடையில் எதிர்கட்சியை கடுமையாக விமர்சித்து விட்டு அதே மேடையில் மன்னிப்பு கேட்பதற்காக கட்சி மாறுவார் , அதே பாணியில் ஈரோடு வெள்ளாளர் கல்லூரியில் நடந்த அரசியல் விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.கவினரை விமர்சித்த நாஞ்சில் சம்பத் , அதே மேடையில் தான் பேசியதை வாபஸ் பெற்ற நிகழ்வு அரங்கேறி உள்ளது
தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த இதனை காண பல்வேறு அரசியல் கட்சியினரும் பார்வையாளராக அந்த கல்லூரி கலையரங்கத்தில் குவிந்திருந்தனர். அதில் பங்கேற்ற திமுகவின் நாஞ்சில் சம்பத் , பாரதீய ஜனதா கட்சியினரை தரக்குறைவான வார்த்தையால் விமர்சித்ததாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ.கவினர் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை கையில் தூக்கிக் கொண்டு நாஞ்சி சம்பத்தை அடிக்க பாய்ந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அவர்களை அமைதிப்படுத்திய நிலையில் ஒரு சிலர் நாற்காலிகளுடன் மேடையில் ஏறியதால் நாஞ்சில் சம்பத் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி போனார். சட்டென்று மைக்கை பிடித்த அவர், தான் சொன்ன கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனை தொடர்ந்து பா.ஜ.கவினர் அமைதியாக தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்தனர். அரசியல் வாதியாக பல கட்சிகளுக்கு தாவி தாவி பயணித்து வரும் நாஞ்சில் சம்பத் , மக்கள் தன்னை காரி துப்பினால் துடைச்சிக்குவேன் என்ற கொள்கை உடையவர் என்றாலும், பேசிய மேடையிலேயே தனது கருத்தை வாபஸ் பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Comments