32 பெண்களை கொன்ற பிகினி கில்லர் சோப்ராஜ் சிறையிலிருந்து விடுதலை..! பாம்பு என்று அழைக்கப்பட்டவன்

0 6622

32 வெளிநாட்டு பெண்களை பிகினி உடையில் கொலை செய்த சைக்கோ கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் தனது 17 ஆண்டு கால சிறைவாசத்தை முடித்துக் கொண்டு நேபாள சிறையிலிருந்து விடுதலையானான். பாம்பின் விஷத்துக்கு இணையான சைக்கோ கில்லரின் நிஜ முகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

இந்திய தந்தைக்கும் வியட்நாம் தாய்க்கும் பிறந்த சர்வதேச கோலப்ரேசன் கேடி சார்லஸ் சோப்ராஜ்..!

இளம் வயதிலேயே பிரெஞ்ச் நாட்டில் குடும்பத்தோடு குடியேறியதால் அந்த நாட்டு பிரஜையான இவன், தனது 19 வயதில் முதல் திருட்டை ஆரம்பித்தான். சிறையில் கிடைத்த கூடா நட்பு அவனை முழு நேர திருடனாக மாற்றியது.

கொள்ளையடிப்பதும் சிறைக்குச் செல்வதுமாக இருந்த சோப்ராஜ், நிழல் உலக தாதாக்களுடன் நட்பு வைத்துக் கொண்டு போதைப்பொருள், வைரக்கடத்தல் என்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு தனக்கு இடையூராக இருந்தவர்களை கொலை செய்ய துவங்கினான். பெண்களுடன் பழகி மயக்குவதில் வல்லவனான சோப்ராஜ், அவர்களை பிகினி உடையில் வரவழைத்து தனது இச்சையை தீர்த்துக் கொண்டு கொலை செய்வதை வாடிக்கையாக்கியதால் அவனை பிகினி கில்லர் என்று போலீசார் அழைத்தனர்.

பல்வேறு கொலை வழக்குகளில் பிரெஞ்ச் போலீஸார் தீவிரமாக தேடத் தொடங்கியதும் அங்கிருந்து தப்பி இந்தியா வந்த சோப்ராஜ், இங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் வைத்து பிறந்த நாள் கொண்டாடிய சோப்ராஜ், சிறைக் காவலர்களுக்கு மயக்க மருந்து கலந்த உணவை வழங்கி 4 கூட்டாளிகளுடன் தப்பிச்சென்றான். எப்போதும் ஸ்டார் ஓட்டல்களிலும், உல்லாச தீவுகளிலும் பெண் தோழிகளுடன் சுற்றும் சோப்ராஜ் அவர்களில் சிலரை கொலை செய்து விட்டு இந்தியாவிலிருந்து தப்பினான்.

ஆப்கானிஸ்தான், ஈரான், கிரீஸ், தாய்லாந்து, பிரான்ஸ் என்று பல நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்டில் இடம் பெயர்ந்து சர்வதேச போலீஸாருக்கே தண்ணீ காட்டிய கொடியவன் என்பதால், அவனை பாம்பு என்று குறிக்கும் வகையில் சர்பன்ட் என சர்வதேச போலீசார் அழைத்தனர்.

சர்வதேச நாடுகளில் எல்லாம் கண்ணில் மண் தூவி தப்பிய சோப்ராஜ் சின்னச்சிறிய நாடான நேபாளத்தில் சூதாட்ட கிளப்பில் நடந்த மோதலில் போலீசில் வசமாக சிக்கினான். போலீசாரின் தொடர் விசாரணையில் அவன், நேபாளத்தில் 2 வெளிநாட்டு பெண்களை எரித்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தான்.

தான் 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதாலும், தனக்கு தற்போது 78 வயது ஆவதாலும் நேபாள சட்டத்தின் படி மூத்த குடிமக்களுக்கான சலுகையில் தன்னை விடுவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தான். அதன்படி நீதிமன்றம் நேபாள சிறையிலிருந்து சோப்ராஜை விடுவித்ததோடு, பிரெஞ்ச் நாட்டிற்கு கடத்த உத்தரவிட்டது.

நாடி நரம்பு ரத்தம், சதையெல்லாம் கொலை வெறி ஊறிய ஒருவன் சோப்ரா என்றும், எந்த நிலையிலும் அவனால் அதனை விட முடியாது என்றும் தெரிவித்த நேபாள போலீஸ் அதிகாரி ஒருவர், அவன் இதுவரை 32 பெண்களை ஒரே மாதிரியான சைக்கோ பாணியில் கொலை செய்திருப்பதாக தெரிவித்தார். இவனது நிஜமுகத்தை தி சர்பன்ட் என்ற பெயரில் நெட்பிளிக்ஸில் படமாக வெளியிட்டு உள்ளனர்.

17 வருடங்கள் கழித்து வெளியே செல்லும் இந்த சீரியல் சைக்கோ கில்லர் இனிமேல் என்ன செய்வான்? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments