கஞ்சா போதையில் அடுத்தடுத்து ஏழு பெட்டிக் கடைகளில் கத்தி முனையில் கொள்ளை.. இருவர் கைது!
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அடுத்தடுத்து ஏழு பெட்டிக் கடைகளில் கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் கத்தி முனையில் தாக்கி 18,500 ரூபாயை கொள்ளையடித்ததுடன் 7 செல்போன்களையும் பறித்து சென்றுள்ளனர்.
கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் பெட்டி கடைக்காரர்கள் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள குள்ளப்பன் நகர் பகுதியில் வசிக்கும் விமல் என்பவர் வீட்டிலேயே சிறு கடை நடத்தி வருகிறார்.இவரிடம் தண்ணீர் கேட்டு தகராறு செய்த கொள்ளையர்கள் பட்டா கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த பணத்தையும் செல்பேசியையும் பறித்து சென்றனர்.
இதையடுத்து படாளம் தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாடவீதி, டோல்கேட், தேனம்பாக்கம், உள்ளிட்ட பகுதியில் 7 பெட்டிக்கடைக் காரர்களை டிடிஎப் யூட்யூப் பேன்கள் என கூறி, பட்டா கத்தியால் சரமாரியாக தாக்கி கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்ததுடன் செல்போன்களையும் பறித்து சென்றுள்ளனர்.இதில் செல்வமணி,நரேஷ் என்ற இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.
Comments