தனுஷ்கோடி- ஆழிப்பேரலையின் நினைவலைகள்..!
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கியதன் 58வது ஆண்டை இன்று அனுசரிக்கிறது. துறைமுக நகரமாக வளம் கொழித்த தனுஷ்கோடி ஒரே இரவில் சிதைந்து போனதன் வரலாறு சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கும் அதன் பின்னர் இந்தியர்களுக்கும் பிரதான துறைமுக நகராக விளங்கியது தனுஷ்கோடி. விமான சேவைகள் மேம்படாத காலத்தில் பிழைப்புக்காக நாடு விட்டு நாடு சென்ற தொழிலாளர்களுக்கான எளிய வழியாகவும் இருந்தது தனுஷ்கோடி.
இப்படி இன்னும் பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட தனுஷ்கோடி நகரத்தை கடந்த 1964ஆம் ஆண்டு இதே நாளில் சூறையாடிச் சென்றது இயற்கை.
280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்தப் புயலை தனுஷ்கோடி மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை, குஜராத்தில் இருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வந்த மருத்துவத்துறை மாணவர்கள் 40 பேர் உட்பட சுமார் 200 பேருடன் வந்த பயணிகள் ரயிலை கடலுக்குள் இழுத்துவிட்டது புயல். அதில் பயணித்த அத்தனை பேரும் ஜலசமாதி அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க தனுஷ்கோடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களும் பேரலைகளுக்கு இரையாகினர்.
மனித உயிர்களை மட்டுமல்லாது கால்நடைகள், துறைமுக கட்டடங்கள், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், நிர்வாக அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் என எதனையும் விட்டு வைக்காமல் தனது கோரப் பசிக்கு ஆட்படுத்திய ஆழிப்பேரலை. அதன் வேகத்திற்கு மிச்சமாக நின்றது சிதிலமடைந்த சில கட்டடங்கள் மட்டுமே.
புயல் தாக்கி அரை நூற்றாண்டை கடந்த நிலையிலும் கூட தனுஷ்கோடியில் மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர்வசதி என்று எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் கடலை மட்டுமே நம்பி இன்றும் தனுஷ்கோடி சுற்றி 500க்கும் மேற்பட்ட கரைவலை இழுக்கும் மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ரயில்சேவை, கலங்கரைவிளக்கம், அரசுப் பள்ளி, தபால்நிலையம்,மீன்பிடி துறைமுகம் போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தவர்களை மீண்டும் தனுஷ்கோடியில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments