இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை கொரோனா பி.எஃப்.7
சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும், கொரோனாவின் புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரான் தொற்று, இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் 2019-ல் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்தது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
சீனாவில் அதிவேகமாக கொரோனா பரவியதற்கு காரணம் எனக் கருதப்படும் ஒமிக்ரான் பி.எஃப்.7 வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பி.எஃப்.7 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பிஏ.5-ன் துணை வகையான பிஎப்7 தொற்று வேகமாக பரவக்கூடியதாகும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் திறன்கொண்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்டநாடுகளில் ஏற்கனவே பரவியிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments