விலங்குகள் வதை தடுப்பு சட்டத்திலிருந்து கோழிகளுக்கு விலக்கு தேவை -திமுக எம்.பி., கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு
விலங்குகள் வதை தடுப்பு சட்ட வரைவு மசோதாவில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென மாநிலங்களவை திமுக எம்.பி கேஆர்என்.ராஜேஸ்குமார் வைத்த கோரிக்கையை ஏற்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நேரமில்லா நேரத்தில் பேசிய ராஜேஸ்குமார், இந்தியா 3 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் முட்டை மற்றும் இறைச்சியை ஏற்றுமதி செய்து வரும் நிலையில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இந்நிலையில், வரைவு மசோதாவில் கோழி சேர்க்கப்பட்டால், முட்டை உற்பத்தி, மற்றும் இறைச்சிக்கான கோழி வளர்ப்புத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால் கோழிகளை உற்பத்தி பறவைகளாகக் கருதி முறைப்படுத்த வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி பேசினார்.
பதிலளித்து பேசிய மத்திய கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீபுருஷோத்தம் ரூபாலா, கோழிப்பண்ணையாளர்கள் நலன் பாதிக்கப்படும் வகையில் மத்திய அரசு, எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்றும், அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்ற பிறகு தான் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் அறிவிப்புக்கும், திமுக எம்.பி ராஜேஷ்குமாருக்கும், தமிழ்நாடு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
Comments