எலும்பும் தோலுமாக... பாவம் அந்த நாய்கள் பரிதாப பூனைகள்..! அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை
தாம்பரம் அருகே தனியார் வீட்டு விலங்குகள் காப்பகம் ஒன்றில் நூற்றுக்கணக்கான விலங்குகள் உணவு, குடிநீர் இன்றி துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, காவல்துறையினர் மற்றும் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தி பரிதாப நிலையில் இருந்த நாய்கள், பூனைகள் உள்ளிட்ட101 வீட்டு விலங்குகளை மீட்டனர்
காப்பகம் என்ற பெயரில் கட்டணம் வசூலித்துக் கொழுத்த நிர்வாகிகளால் உடல் மெலிந்த பரிதாப ஜீவன்கள் இவைகள்தான்..!
சென்னை அடுத்துள்ள மேற்கு தாம்பரம் எட்டியாபுரம் பகுதியில் "யஷூவா அனிமல் டிரஸ்ட் " என்ற தனியார் காப்பகமொன்று இயங்கி வருகிறது. கட்டணம் பெற்றுக் கொண்டு வீட்டு விலங்குகளை பராமரிக்கும் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய், பூனை உட்பட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.
வீட்டு விலங்குகளை பராமரிக்க கொடுத்தவர்கள் பார்ப்பதற்காக அங்கு செல்லும் பொழுது அனுமதிக்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. அதேபோல், முறையான அடிப்படை வசதி இல்லாமல் உணவு வழங்காமல் துன்புறுத்தப்படுவதாகவும் விலங்கு நல ஆர்வலர்களும் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் மத்திய விலங்கு நல வாரிய அதிகாரிகள், விலங்கு நல ஆர்வலர்கள் என குழுவினர் சென்று அந்த தனியார் வீட்டு விலங்குகள் காப்பகத்தில் ஆய்வு செய்ததில் எலும்பும் தோலுமாக பரிதாப நிலையில் காணப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உணவு இல்லாமல் பூனைக்குட்டி ஒன்றை மற்ற பூனைகள் பசிக்காக கடித்து தின்ற காட்சிகளையும், துன்புறுத்தி கால்கள் உடைக்கப்பட்டதால் தவழ்ந்து வந்த நாய்களையும் பார்த்த மத்திய விலங்கு நல அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அவற்றை மீட்க முடிவு செய்தனர்
நாய்கள் , நாய்க்குட்டிகள், பூனைகள், பூனைக்குட்டிகள் என மொத்தம் 101 வீட்டு விலங்குகளை மீட்டு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பின்னர் தன்னார்வலர்கள் மூலம் பல்வேறு காப்பகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவை பராமரிக்கப்படுகின்றன.
விலங்குகள் நல வாரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமங்கலம் போலீசார் விலங்கு வதை தடைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தனியார் வீட்டு விலங்குகள் காப்பகத்தை நடத்தி வந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments