காசேதான் கடவுளடா...! இலவச வீடு கட்டித்தருவதாக அஜித் ரசிகரிடம் துணிவா மோசடி..! கலைக்கப்பட்ட மன்றத்தில் களவாணி
நெல்லையில் ரசிகர்களுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அஜீத் சொந்தமாக வீடு கட்டி தர சொல்லி இருக்கிறார் என ஏமாற்றி, ஓட்டல் மாஸ்டரிடம் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பறித்த அஜீத் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வரும் ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது . இவரது மனைவி ராஜேஸ்வரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் தனது கணவர் அய்யப்பன் தீவிர அஜீத் ரசிகர் என்பதை பயன்படுத்திக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டம் தாளையூத்து பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர் மன்ற தலைவர் என்று கூறிக் கொள்ளும் சிவா என்பவர், அஜீத்தின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி நம்ப வைத்தார் என்றும், நடிகர் அஜித், கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் இலவசமாக வீடு கட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, தனது கணவரை ஏமாற்றி விட்டதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், வீடு கட்டுவதற்கான தொகை 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன், பத்திரப்பதிவிற்கான தொகையும் சேர்த்து உங்களின் வங்கிக்கணக்கிற்கு வந்துவிடும் என்று கூறி, சிவா ஏமாற்றியதாகவும்
ராஜேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது கணவர் அய்யப்பனை உறுதிபட நம்ப வைத்து, பணத்தை பெறுவதற்காக, நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்று போலியான நபரை தயார் செய்து, தனது கணவரிடம் இருந்து இருபது ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கூகுள் பே மூலம் பணம் கறந்ததாகவும் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.
சிறிய சிறிய தொகையாக ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை சிவாவிடம் கொடுத்து தனது கணவர் ஏமாந்துள்ளதாகவும், இது மோசடி என தெரிந்து சிவாவிடம் பணத்தை திருப்பிக்கேட்டதற்கு, இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுவதாகவும், இதனால் தனது கணவர் வெளியே வர பயந்து இருப்பதாகவும், தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் தாங்கள் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார்.
அஜீத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உழைத்து வாழும் ஏழை ரசிகனிடம் , இலவச வீடு ஆசை காட்டி, கலைக்கப்பட்ட மன்றத்துக்கு மாவட்ட தலைவர் எனக்கூறி துணிவாக பணப் பறிப்பு மோசடியில் ஈடுபட்ட சிவா மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments