மேகாலயாவில், ரூ.2,450 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!
வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய அமைதியின்மை, ஊழல், வளர்ச்சியின்மை போன்ற அனைத்து தடைகளையும், தமது அரசு தகர்த்தெறிந்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேகாலயாவின் ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாவில், சுமார் இரண்டாயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேகாலயாவின் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்தும் வகையில், 4 ஜி சேவையை வழங்கக்கூடிய சுமார் 320 தொலைத்தொடர்பு கோபுரங்களையும், பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உம்சாவ்லியில் (Umsawli) இந்திய மேலாண்மை நிறுவனத்தை தொடங்கி வைத்த அவர், ஒருங்கிணைந்த தேனி வளர்ப்பு மேம்பாட்டு மையம், ஸ்பான் ஆய்வகம் உள்ளிட்டவற்றையும் திறந்து வைத்தார்.
அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் 5 முக்கிய சாலை திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 6 சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
மேகாலயாவின் பாரம்பரிய உடையணிந்து விழாவில் பேசிய பிரதமர், பல இயக்கங்கள் வன்முறையை கைவிட்டு அமைதிப்பாதைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சியாளர்கள் வடகிழக்கு மாநிலங்களை பிரித்து ஆட்சி செய்ததாகவும், ஆனால் தமது அரசு ஊழல், அமைதியின்மை உள்ளிட்டவற்றை அகற்ற முயற்சித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Comments