உழைச்சி தானே அவரு சம்பாதிக்கிறார் உனக்கு ஏன் கோபம் வருது ? பேருந்து நிலைய கடைக்காரர் அடாவடி
பழனி பேருந்து நிலையத்தில் குறைந்த விலைக்கு செல்போன் கவர் விற்றுக்கொண்டிருந்த இளைஞரை மறித்த செல்போன் கடைக்காரர் ஒருவர், தனது வியாபாரம் பாதிப்பதாக கூறி, அவரை தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. புகாரின் பேரில், செல்போன் கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழனி பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர், கட்டப்பையில் வைத்து செல்போன் கவர்களை குறைந்த விலைக்கு விற்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த செல்போன் கடை உரிமையாளர், அந்த இளைஞரை மறித்து, இப்படி போகிற போக்கில் விற்றால், கடையை வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வரும் தங்களுக்கு எப்படி வியாபாரம் ஆகும் ? என்று கேட்டு, எச்சரித்தார்.
இப்படித்தான் செல்போன் கவர்ன்னு விற்க ஆரம்பிச்சி, அப்புறம் புது மாடல் போனை குறைந்த விலைக்கு கொடுத்துட்டு போவீங்க..
நாங்க அப்படியே உட்காந்து இருக்கனுமா ? எனக் கேட்டு, அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்து விரட்டினார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், உரிய வேலைவாய்ப்பு கிடைக்கவிட்டாலும், தனது சொந்த முதலீட்டில் கால் கடுக்க சுற்றி, செல்போன் கவர்களை விற்று பிழைக்கும் இளைஞரை தாக்கிய செல்போன் கடைக்காரரின் அடாவடி செயலுக்கு, கண்டனங்கள் எழுந்துள்ளன.
Comments