வாயில திருப்பதி லட்டு மொத்தமா தூக்கிணு போச்சு ரூ.6 லட்சம் துட்டு..! களவாணி பெண் கைவரிசை
திருப்பதி லட்டுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தொழில் அதிபரிடம் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சுருட்டிச்சென்ற கில்லாடி லேடியை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.
ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினார். பேருந்தில் அவரது இருக்கைக்கு அருகில் இளம்பெண் ஒருவர் வந்து அமர்ந்தார்.
பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் இளம்பெண் அருகில் இருந்த தொழில் அதிபரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். நீண்ட நேரமாக இருவரும் மனம் விட்டு பேசியதால் நெருக்கம் அதிகமானது.
பேருந்து காளஹஸ்தி சென்றதும் அந்த இளம்பெண், லாட்ஜ்க்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கோயிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். அந்த தொழில் அதிபரும் கசாப்பு கடைகாரனை நம்பிச்செல்லும் ஆடு போல அந்த பெண்ணுடன் லாட்ஜுக்கு சென்று அறை எடுத்து ஒன்றாக தங்கினார்.
அங்கு வைத்து அந்த இளம்பெண், 'திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் இருக்கிறது, சாப்பிடுங்கள் என்று அவரிடம் கொடுத்துள்ளார். அதனை ஆசை ஆசையாய் வாங்கிச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் தொழில் அதிபர் மயங்கி விழுந்தார்.
நீண்ட நேரம் கழித்து மயக்கம் தெளிந்து விழித்து பாரத்த அந்த தொழில் அதிபர், தான் அணிந்திருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் களவாடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கையைப்பிடித்து வாழ்க்கையெல்லாம் உடன் வருவேன் என்று வாக்குறுதி அளித்த அந்த பெண்ணையும் காணவில்லை.
அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நகை, பணத்தை திருடிக் கொண்டு இளம்பெண் தப்பியது தெரியவந்தது. அவர், காளஹஸ்தி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட லாட்ஜில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த இளம்பெண் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் களவாணி இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆன்மீக பயணத்தில் சபலம் ஏற்பட்டு, முன்பின் அறிமுகம் இல்லா பெண்ணை நம்பிச்சென்றால் என்ன மாதிரியான சம்பவம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கொள்ளை சம்பவம்
Comments