பலாத்கார வழக்கில் 3 மாதங்களாகத் தேடப்படும் காவல் உதவி ஆய்வாளர்..!
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய வங்கிப் பெண் ஊழியரை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்குகளில் தலைமறைவாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை சென்னை பள்ளிக்கரணை போலீசார் 3 மாதங்களாகத் தேடிவருகின்றனர்.
சென்னை, செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் உள்ள காவல் துறை மோட்டார் வாகனப் பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல்.
தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மீது வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த வங்கிப் பெண் ஊழியருக்கு உதவுவது போல நெருங்கிப் பழகி பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து சொத்துக்களை அபகரித்ததாக இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பலாத்கார வழக்கில் ஆண்ட்ரூஸ் பெற்றிருந்த முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அவரை பள்ளிக்கரணை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் சுவாமிதாஸ் என்பவரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மிரட்டி பறித்ததாக காவல் உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் மீது புதிய வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் போலீசுக்கு சவால் விடும் வகையில் ஆண்ட்ரூஸ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார் என்றும், தங்கள் புகார்களின் மீது தாம்பரம் காவல் ஆணையர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Comments