கூர்மையான ஆயுதங்கள்.. டேசர் துப்பாக்கிகள்.. 200 பேருடன் ஊடுருவிய சீனா..!
அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி நுழைந்த சீன ராணுவத்தினரின் அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தவாங் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் 300 முதல் 400 பேர் வரை அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலை அடுத்து இரு தரப்பினரும் அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறினாலும், மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்ததாகவும், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இந்திய வீரர்கள் 6 பேர் கவுஹாத்தியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு லடாக்கிலிருந்து அருணாச்சல வரையிலான 3,488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சிறு சிறு மோதல்கள் நடைபெற்றிருந்தாலும், 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப்பிறகு முதன்முறையாக தற்போது பெரிய அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலுக்குப் பிறகு அப்பகுதியில் பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட இந்திய கமாண்டர், சீன அதிகாரியுடன் கொடி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை முறியடிக்க இந்தியா அதிக எண்ணிக்கையிலான வீரர்களை நிறுத்தியுள்ளது.
Comments