பாலாற்றை ஒட்டிய 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தல்..!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், உத்திரமேரூர் வட்டங்களில் பாலாற்றங்கரை ஓரமுள்ள 30 கிராமங்களுக்கு
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பாலாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என்றும் கரையோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அடையாறு கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கும் நீர்வரத்து அதிகரித்த நிலையில், உபரி நீர் திறப்பு, வினாடிக்கு ஏழாயிரத்து ஐநூறு கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதை அடுத்து, கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments