வந்தவாசி அருகே தனியார் பேருந்தில் தீ விபத்து... உயிர் தப்பி 50க்கும் மேற்பட்ட பயணிகள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
காஞ்சிபுரத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் 50க்கும் மேற்பட்டோர் அச்சரபாக்கத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பினர்.
வீரம்பாக்கம் கிராமம் கூட்டுச்சாலை அருகே சாலையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து திடீரென பாலத்தின் மீது மோதியது.
இதில் பேருந்தின் முன் சக்கரமானது கழன்ற நிலையில், அந்த பேருந்து சாலையில் தேய்த்துக் கொண்டு சென்றதால் தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
பேருந்தில் இருந்த அனைவரும் அலறி அடித்து கொண்டு இறங்கியதால் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த வந்தவாசி தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Comments