ஒரு கோடி ரூபாய் திருடுபோன விவகாரம்.. உரிமையாளரே பணத்தை மறைத்து வைத்தது அம்பலம்..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, ஒரு கோடி ரூபாயை கரும்புத்தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, பணம் திருடுபோனதாக நாடகமாடிய விவசாயி போலீஸ் விசாரணையில் சிக்கினார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கணேசன், தனது நண்பரான லோகநாதனிடம், 2 பைகளில் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் 2 கோடி ரூபாய் கொடுத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த புதன் கிழமை, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கோடி ரூபாயை திருடிச்சென்றதாக லோகநாதன் போலீசில் புகாரளித்தார்.
நேற்று வீட்டருகே உள்ள கரும்புத்தோட்டத்தில் போலீசார் சோதனையிட்டபோது கிடைத்த பையில் அந்த ஒரு கோடி ரூபாய் இருந்துள்ளது.
கைரேகை நிபுணர்கள் வீட்டை ஆய்வு செய்தபோது எவ்வித ரேகைகளும் சிக்காததால் சந்தேகமடைந்த போலீசார் லோகநாதனிடம் குறுக்கு விசாரணை நடத்தியபோது, நண்பரின் ஒரு கோடி ரூபாயை அபகரிக்கும் நோக்கில், பணத்தை மறைத்து வைத்துவிட்டு திருடுபோனதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.
Comments