சென்னையை புரட்டிபோட்ட மாண்டஸ் புயல்.. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன சேதம்?

0 2245

மாண்டஸ் புயல் கரையை கடந்தபோது வீசிய பலத்த காற்றால் கடலோரப் பகுதிகளில் படகுகள் சேதமடைந்த நிலையில், ஆங்காங்கே சாலையிலும், கட்டடங்களிலும் சாய்ந்த மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல், நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலைக்குள் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், கடலோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் படகுகள் சேதமாகின.

சென்னை காசிமேடு பகுதியில் வீசிய பலத்த காற்றால் ஒன்றோடு ஒன்று மோதி சுமார் 50 படகுகள் சேதமடைந்தன.

சென்னை மெரினா கடற்கரையில் மீனவர்களின் படகுகள் பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டு சேதமானதுடன், வலைகள், படகு எஞ்சின்கள் மணலால் மூடப்பட்டது.

மெரினா கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், கடற்கரையில் உள்ள கடைகள் தண்ணீரால் சூழப்பட்டன.

சென்னையில் வீசிய பலத்த காற்றால் நகர்ப்பகுதியில் 350க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பேசின் பிரிட்ஜ் பகுதியிலும், சில இடங்களில் மரங்களும், போக்குவரத்து சிக்னல் கம்பங்களும் சாய்ந்த நிலையில், அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

சென்னை அசோக் நகர் பகுதியில் குடியிருப்பின் மீதும், சோழிங்கநல்லூர் நெடுஞ்செழியன் சாலையிலும் வேரோடு சாய்ந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

அதேபோல், ராஜாஜி சாலையிலும் மரங்கள் சாய்ந்ததுடன், 30-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. நகர்ப்பகுதியில் பலத்த காற்றால் சாலையிலும், கட்டடங்கள் மீதும் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.

சென்னை திருவல்லிக்கேணியில் சுமார் 70 அடி நீள மரம் கீழே விழுந்தில் பள்ளியின் சுற்றுச்சுவர், வாகனங்கள் சேதமடைந்தன. மாம்பலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில், அருகே நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள் பலத்த சேதமடைந்த நிலையில், அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

புயல் கரையைக் கடந்தபோது மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சூளேரிக்காடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன.

மாமல்லபுரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் தணிந்து தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments