கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

0 5676

சென்னை அடுத்த உத்தண்டியில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஏழைப்பெண் ஒருவர் கொட்டும் மழையில் அழுதபடி முழங்கால் அளவு தண்ணீரில் தன் கணவனை தேடிய நிலையில் அவரையும், அவரது கணவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

வங்கக் கடலை வாட்டி எடுத்து கரையைக் கடந்த மாண்டாஸ் புயல் கடற்கரைக் கடைகளை பிரித்து மேய்ந்தது. நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்தன.

இந்த நிலையில் உத்தண்டி குப்பத்தில் கடல் நீர் உட்புகுந்ததால் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. கொட்டும் மழைக்குள் பெண் ஒருவர் பரிதவிப்புடன் தனது கணவரைத் தேடியபடி வந்தார்.

கல்லூரி ஒன்றில் கூலி வேலைக்குச் சென்று விட்டு தற்போது தான் திரும்பியதாகவும், தனது வீட்டிற்குள் நீர் புகுந்த நிலையில் தனது கணவரைக் காணவில்லை என்று தேடிச்செல்வதாக தெரிவித்தார்.

கணவர் கிடைப்பார்... கவலைப்படாதீர்கள் என்று செய்தியாளர் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்த தண்ணீரில் தவித்தபடியே கணவனை தேடிச் சென்றார்.

அந்தப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் இந்த தகவலை செய்தியாளர் தெரிவித்ததும், வேனுடன் குப்பத்துக்குள் சென்ற போலீசார், அந்த பெண்ணையும், அவரது கணவரையும் பத்திரமாக மீட்டு முகாமில் கொண்டு சேர்த்தனர்.

கணவனைக் கண்கண்ட தெய்வமாக நேசிக்கும் மனைவியர் இன்றைய சமூக சூழலிலும் இருப்பதற்கு இந்த பரிதவிப்பு சம்பவமே சாட்சி. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments