கரை நெருங்கிய மாண்டஸ் புயல்... ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்த வானிலை மையம்
மாண்டஸ் புயல் இன்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மூன்று மணிநேரத்திற்குள் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என அறிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், புயல் கரையை நெருங்கியதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கே மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக இருந்த மாண்டஸ், காலை புயலாக வலுகுறைந்த நிலையில், இன்றிரவில் ஸ்ரீஹரிகோட்டா - புதுச்சேரி இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, சூறாவளிக்காற்று மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments