லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி

0 2243

பெண்குரலில் பேசி ஐ.டி. மாப்பிள்ளையிடம் 21 லட்சம் ரூபாயை லாவகமாக பறித்த பலகுரல் கேடியை சென்னை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரகுராம். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

39 வயதான ரகுராமிற்கு திருமணத்திற்கு பெண் தேடிய போது மேட்ரிமோனியல் மூலம் பெண்ணின் சித்தப்பா என்று கல்யாணராமன் அறிமுகமாகி உள்ளார். அவர் அனுப்பி வைத்த அழகான இளம் பெண்ணின் படத்தை பார்த்ததும் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்து விட்டது.

அதன் பின் கல்யாண ராமன் , மணப்பெண் ஐஸ்வர்யாவின் செல்போன் எண்ணை ரகுராமனிடம் கொடுத்துள்ளார். முப்பொழுதும் ரகுராமன் ஐஸ்வர்யாவிடம் செல்போனில் பேசி மகிழ்ந்து வந்தார்.

திடீரென ஒருநாள் ஐஸ்வர்யா தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ரகுராமிடம் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டுள்ளார். இதை நம்பி ரகுராம் முதலில் ஜி pay-யில் முதன் முறையாக 8 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு பணம் வேண்டும் எனவும், பல்வேறு காரணங்களைச் சொல்லியும், கொஞ்சிப்பேசியும் ஐஸ்வர்யா பலமுறை ரகுராமிடம் இருந்து சுமார் 21 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகின்றது

இந்நிலையில், ரகுராம் ஐஸ்வர்யாவிடம் திருமண ஏற்பாடுகள் குறித்து கேட்டுள்ளார். ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்ததால் சந்தேகம் அடைந்து கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

பணத்தை திரும்ப தர முடியாது என கல்யாணராமனும், ஐஸ்வர்யாவும் ரகுராமிடம் கூறியதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகுராம் புகார் அளித்தார்.

நுங்கம்பாக்கம் போலீசார், செல்போன் எண்ணை வைத்து சேலத்தைச் சேர்ந்த தாத்தாத்ரி என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் கல்யாணராமன் என்ற பெயரிலும், ஐஸ்வர்யா என்று பெண் குரலிலும் பேசியது தாத்தாத்திரி தான் என்பது தெரியவந்தது.

ஒரே நபர் இரண்டு பேரைப் போல் பேசி மொத்தப் பணத்தையும் லாவகமாக ஆட்டையைப் போட்டது அம்பலமானது. இந்த தகவலைக் கேட்டு ரகுராம், தாம் இதுவரை பேசி வந்தது ஐஸ்வர்யா அல்ல 50 வயதான ஆசாமி என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

தொடர் விசாரணையில் மேட்ரிமோனி இணையதளத்தில் ஐஸ்வர்யா என்ற போலியான பெயரில் கணக்கு துவங்கி இணையதளத்திலிருந்து மாடலிங் பெண் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

39 வயதானதால் பெண் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் நேரில் பார்க்கவில்லை என்றாலும் எப்படியாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அந்த ஐஸ்வர்யாவிடம் தொடர்ந்து பேசியதால் ஏமாந்துள்ளார்.

கொரியர் வந்துள்ளதாக கூறி போலீசார் தத்தாத்திரியை சுற்றி வளைக்க திட்டமிட, அதை தெரிந்து கொண்ட அவர், தான் மைசூரில் இருப்பதாக கூறி நழுவி உள்ளார். இறுதியில் சாதுரியமாக சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தத்தாத்திரியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

இயற்கையிலேயே பெண் தன்மை கொண்ட குரல் தத்தாத்திரிக்கு இருப்பதன் காரணமாக அதனை பயன்படுத்தி பெண் குரலில் பேசி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. மோசடியாக பறித்த மொத்த பணத்தையும் கேலக்ஸி வின் என்கின்ற ஆன்லைன் கேம்மில் இழந்ததாக தாத்தாத்திரி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு காயின் மேல் 8000 ரூபாய் பந்தயம் வைத்து வெற்றி பெற்றால் 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற அடிப்படையில் தொடர்ந்து அந்த ஆன்லைன் கேம்மிலேயே விளையாடி மோசடியாக சம்பாதித்த 21 லட்சம் ரூபாய் பணத்தையும் இழந்துள்ளதாக தத்தாத்திரி தெரிவித்துள்ளார்

கைது செய்யப்பட்ட தத்தாத்திரி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஒரு மணி நேர விசாரணைக்கு பின்பு 14 நாள் நீதிமன்ற தத்தாத்திரியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments