அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தின் கண்ணாடியை கத்தியால் உடைத்து பவுசு காட்டிய ரவுடிக்கு போலீசார் கையில் மாவுக் கட்டு போட்டு விட்டனர். சவால் விட்டவர் தண்டவாளத்தில் சறுக்கி விழுந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு
காஞ்சிபுரத்தில் இருந்து கண்ணன் தாங்கல் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பின்னால் இரு சக்கரவாகனத்தில் வந்த 3 பேர் ஹாரன் அடித்தபடியே சென்றுள்ளனர்.
குறுகிய சாலை என்பதால் பேருந்து ஓட்டுனர் வழிவிட இயலாமல் சென்றுள்ளார். பூக்கடை சத்திரம் பகுதியில் வைத்து அந்த பேருந்தை முந்திச்சென்ற 3 இளைஞர்களும், உள்ளூரில் தங்கள் செல்வாக்கு என்ன தெரியுமா ? எப்படி வழிவிடாமல் செல்வாய் ? எனக் கேட்டு ஓட்டுனரை அடிக்க பாய்ந்ததோடு பட்டாக்கத்தியால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு , இப்ப எங்களுக்கு பின்னால் வா பார்ப்போம் என்று சவால் விட்டு சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். மைனர் போல கையில் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடு பட்டது ரவுடி சரவணன் தலைமையிலான கும்பல் என்பதை கண்டுபிடித்தனர்.
அவர்களது செல்போன் மூலம் தண்டவாள பகுதியில் பதுங்கி இருந்த சரவணனை பிடிக்க போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது தண்டவாளத்தில் சறுக்கி விழுந்ததில் சரவணனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மாவுக்கட்டு போட்டு விட்டனர். சரவணனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த சிவா மற்றும் குட்டி சரவணனும் கைது செய்யப்பட்டனர்.கத்தி எடுத்த கைக்கு மனித நேயத்துடன் மாவுக்கட்டு போட்டு விட்ட சம்பவத்தால் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Comments