வங்கக் கடலில் உருவானது மாண்டஸ் புயல்.. நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும்..!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 11.30 மணியளவில் மாண்டஸ் புயலாக உருவெடுத்தது. சென்னைக்கு தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த புயல் மேற்கு - வடமேற்கே மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை நள்ளிரவில் மேன்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடல் சீற்றம் கடுமையாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 390 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Comments