யோகிபாபு படவெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை..! வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் உள்ளிட்ட இருவரை கடத்திச்சென்று நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து பணம் பறித்த கும்பல் போலீசாரிடம் சிக்கி உள்ளது. காமெடி நடிகர் யோகி பாபு நடித்த படத்தை வாங்கி , நஷ்டம் அடைந்ததோடு, அடியும் வாங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தனி ஒருவன், மனம் கொத்திப்பறவை, டோரா உள்ளிட்ட ஏராளமான படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் சொந்தமாக படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்டதால், வினியோகஸ்தர் மதுராஜ் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்தார்.
விநியோகஸ்தர் மதுராஜ், யோகிபாபுவின் நடிப்பில் உருவான ஷூ என்ற படத்தின் ஓடிடி, டிஜிட்டல் மற்றும் வெளி மாநில வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ளார்
இதற்காக ஷூ படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் என்பவரிடம் 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்ட மதுராஜ், முன்பணமாக 20 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மீதம் உள்ள பணத்தை பட வெளியீட்டுக்கு பின் இரு தவணைகளாக கொடுப்பதாக கூறி உள்ளார்.
ஷூ படம் படு தோல்வி அடைந்ததால் எவரும் அந்த படத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் மதுராஜ் ஒப்பந்தபடி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
இந்த நிலையில் மதுராஜை தேடி விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்ற ஷூ பட தயாரிப்பாளர் கார்த்திக், அங்கு இருந்த படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா, மற்றும் ஊழியர் பென்சர் ஆகிய இருவரை பணய கைதி போல கடத்திச்சென்று நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து, மதுராஜிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகின்றது.
மதுராஜோ, தான் மனைவியின் பிரசவத்திற்காக மதுரைக்கு வந்து விட்டதாக கூறி நழுவியதால் கடத்தப்பட்ட இருவரிடமும் ஏ.டி.எம் கார்டை பறித்து அதில் இருந்து சுமார் 70 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கத்தியால் வெட்டி இருவரையும் தாம்பரம் பகுதியில் கண்ணை கட்டி இறக்கி விட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது
இதில் கோபி கிருஷ்ணா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பென்சரை காணவில்லை. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதையடுத்து சம்பவம் தொடர்பாக மதுராஜ் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் ஷூ படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கின் தூண்டுதலின் பேரில் பிரபல மண்ணிவாக்கம் ரவுடி ஒருவரின் கூலிப்படை கும்பல் கடத்தலில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. முதற்கட்டமாக வினோத்குமார், நாகராஜ் , பிரசாந்த், பாஸ்கரன் , நந்தகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தல் கும்பலிடம் இருந்து ஒரு கார், 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments