தீபத்திருவிழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த திருவண்ணாமலை.. 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது..!
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷமிட்டு, தீப தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அதிகாலையில் கோயில் கருவறை முன்பு, பரணி தீபம் ஏற்றப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க, தீபத்திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாலையில் நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரக்கூடிய அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் கோரத்தாண்டவம் ஆடியபடி, பக்தர்களுக்கு அப்போது காட்சி அளித்தார்.
மாலை 6 மணிக்கு, சுமார் இரண்டாயிரத்து 668 அடி உயரமுடைய மலையின் உச்சியில் அமைக்கப்பட்ட செம்பு கொப்பரையில், சுமார் 1,000 மீட்டர் கடா துணியை பயன்படுத்தி, 650 கிலோ நெய் ஊற்றி, மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர அரோகரா கோஷமிட்டு, தீப தரிசனம் செய்தனர்.
14 கிலோ மீட்டர் தூர கிரிவலப்பாதையிலும் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில்,
திருவண்ணாமலையில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து எரியும் நிலையில், ‘பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Comments