'வணங்கான்' டிராப் பரதேசி பாலாவை விரட்டும் ஹீரோக்கள்..! குப்புற விழுந்தாலும் மண் ஒட்டாத அறிக்கை

0 6843

நடிகர் விக்ரமை தொடர்ந்து சூர்யாவும் இயக்குனர் பாலாவை கைவிட்டதால், வணங்கான் படத்தின் கதை சூர்யாவுக்கு ஏற்றதாக இல்லை என்று அறிக்கை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இயக்குனர் பாலா

ஒரு காலத்தில் நான் கடவுள் படத்திற்காக அஜீத்தை அறையில் அமர வைத்து தனது வலிமையை காட்டியவர் பரதேசி இயக்குனர் பாலா..!

யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எகத்தாளம் பேசுமாம்..! என்ற நிலைக்கு, தானே சறுக்கி வந்துள்ளார் இயக்குனர் பாலா..!

சூர்யாவை வைத்து நந்தாவையும், விக்ரமை உடன் சேர்த்து பிதாமகனையும் கொடுத்து சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் சுடர் ஒளி வீசச் செய்த பாலா தான் இப்போது அவர் வளர்த்துவிட்ட ஹீரோக்களால் விரட்டப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இயக்குனர் எடுத்த படம் சரி இல்லை என்று வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கப்பட்ட படம் ஆதித்யவர்மா. விக்ரம் மகன் துருவை வைத்து முதலில் பாலா இயக்கிய இந்த படம் திரைக்கே வராமல் ஊத்தி மூடப்பட்டது. வேறு இயக்குனர் கைவண்ணத்தில் படம் வெளியானது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த பாலாவை அழைத்து வணங்கி, தனது வளர்ச்சிக்கு உதவியதற்கு கைமாறு செய்யும் விதமாக வணங்கான் என்ற பெயரில் பாலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரித்து நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டார்.

கன்னியாகுமரியில் சில தினங்கள் படபிடிப்பு என்று சூர்யாவை கிலோமீட்டர் கணக்கில் நடக்க வைத்து , எடுத்த காட்சிகளையே திரும்ப திரும்ப எடுத்து சூர்யாவை சுளுக்கெடுத்தார் பாலா என்கின்றனர் விபரம் அறிந்த திரை உலகினர்.

இதனால் நொந்து போய், தயாரிப்பாளர் என்ற முறையில் பாலாவிடம் படத்தின் கதை தான் என்ன என்று சூர்யா கேட்க, தான் யாரிடமும் கதை சொல்வதில்லை என்பதை போல பாலா முறுக்கிக் கொள்ள, சூடான சூர்யா, வணங்கான் படத்தின் படபிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்.

அதன் பின் இரு தரப்புக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் பாலா சொன்ன கதை பிடிக்காததால் சில மாற்றங்களை செய்ய சூர்யா அறிவுறுத்தி இருக்கிறார்.

எந்த ஹீரோவுக்கும் வணங்கான் என்ற கொள்கையுடன் வாழும் பாலா, அதனை நிரூபிக்கும் வகையில் வணங்கான் கதை சூர்யாவுக்கு ஏற்றதாக இல்லை என்ற காரணத்தால், படத்தில் இருந்து சூர்யா விலகியதாகவும், ஆனால் திட்டமிட்டப்படி வணங்கான் படத்தை தான் இயக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார் .

நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் என்றும் அந்த அறிக்கையில் பாலா குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையே வித்தியாசமான உருட்டாக பார்க்கப்பட்டாலும், பாலாவின் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் போட்டிப் போட்ட காலம் போய், பாலாவா.. வேண்டவே வேண்டாம் என்று தாரை தப்பட்டை கிழிய தப்பி ஓடும் நிலை உருவாகி உள்ளது என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments