ஐயா நான்.. தாதா இல்லீங்க.. நடிகர் யோகி பாபுவை அடித்த கின்னஸ் கிஷோர்.! விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர்கள்
தாதா படத்தில் நடிக்கவில்லை என்று யோகிபாபு கூறிவரும் நிலையில் அவரை டப்பிங் அறைக்குள் புகுந்து அடித்ததால் அப்படி கூறுவதாக படத்தின் இயக்குனர் கின்னஸ் கிஷோர் தெரிவித்துள்ளார். ஒரு படத்துக்கு சொந்தம் கொண்டாடும் இருவர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் துரைராஜன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில் தான் நடிகர் நிதின் சத்யா, யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து 5 கோடி ரூபாய் செலவில் மணி என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை எடுத்ததாகவும், இந்த திரைப்படத்தை சென்சார் செய்து ஹார்டிஸ்க்கில் வைத்திருந்த போது, கிஷோர் என்பவர் திருடிச்சென்று தாதா என்ற பெயரில் அதை வெளியிட முயற்சிப்பதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
தாதா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையே தாதா படத்தில் தான் நாயகனாக நடிக்கவில்லை என்று கூறிய யோகிபாபு தன்னை நம்பி யாரும் வாங்கி ஏமாற வேண்டாம் என்று டுவிட்டரில் கூறி இருந்தார். துரைராஜனின் வழக்கறிஞர் விஜய்போஸ், தன்னிடம் யோகிபாபு பேசிய ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கின்னஸ் கிஷோர், துரைராஜன் தனது படத்தின் எடிட்டர் என்றும், மணி என்ற பெயரில் தான் எடுத்த படத்திற்கு அவர் எப்படி உரிமை கொண்டாட முடியும் ? என்று கேள்வி எழுப்பினார்.
யோகிபாபு டப்பிங் பேச வராததால் நீண்ட நாட்களாக படத்தை வெளியிட இயலாமல் தவித்ததாகவும், ஒரு நாள் மற்றொரு படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த யோகிபாபுவை உள்ளே புகுந்து அடித்ததால் பயந்துபோய் தனது படத்திற்கு டப்பிங் பேசிக் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
அந்த ஆத்திரத்தில் இப்போது தான் நடிக்கவில்லை என்று கூறி வியாபாரத்தை கெடுக்கிறார் என்று கூறினார் கின்னஸ் கிஷோர் இந்த நிலையில் தாதா படத்தின் பேனரில் பிரசாத் கிருஷ்ணா வழங்கும் என்ற வாசகத்தை வெள்ளை காகிதத்தை கொண்டு மறைத்து நடத்தப்பட்ட இசை வெளியீட்டு விழாவில், யோகிபாபுவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, அதனை தீர்மானமாகவும் கொண்டு வந்தனர்
Comments