அப்பா எப்பம்மா வருவார்..? தலைகவசம் அணிந்தும் பலியான வங்கி மேலாளர்..! சறுக்கு சாலையால் விபரீதம்
சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் தலைகவசம் அணிந்திருந்தும் வங்கி மேலாளர் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தை எப்போது வருவார் என காத்திருக்கும் குழந்தையின் வேதனை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சில தினங்களே பெய்த மழைக்கு சென்னை புறநகர் சாலைகள் பல சிதிலம் அடைந்தும் மண் நிறைந்தும் காணப்படுகின்றது. அந்த வகையில், மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் சாலை மண் நிறைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சவாலாக மாறி உள்ளது.
சம்பவத்தன்று தனியார் வங்கி மேலாளரான விவேக் சுகுமார் என்பவர் தனது 4 வயது மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக பள்ளிக்கூடத்திற்கு ஆக்டிவா வாகனத்தில் சென்றுள்ளார்.
மாதவரம் 200 அடி சாலை ரவுண்டான அருகில் வந்த போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவரது வாகனத்தின் பின் பக்கத்தில் மோதியது. சாலையில் மண் நிறைந்து காணப்பட்டதால் அவர் வாகனத்துடன் சறுக்கி சாலையில் விழுந்தார். இதில் விவேக் சுகுமார் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் அவர் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட் தனியாக கழன்று ஓடியதாக கூறப்படுகின்றது.
இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய விவேக் சுகுமாரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு ச்கிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார். விபத்தை ஏற்படுத்திய லாரியை பரிமுதல் செய்த போலீசார் ஓட்டுனர் சீனிவாசன் என்பவரை கைது செய்தனர்.
இதற்க்கிடையே தன்னை கூட்டிச்செல்ல தனது அப்பா வருவார் ? என்று காத்திருந்த வங்கி மேலாளரின் 4 வயது மகளிடம், தந்தை விபத்தில் சிக்கிய தகவலை தெரிவிக்காமல் வீட்டுக்கு அழைத்து சென்றதால், அந்த குழந்தை அப்பா எப்பம்மா வருவார் ? என்று கேட்டுக் கொண்டே இருந்துள்ளது.
சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வங்கியில் வேலை பார்த்தாலும், சொந்த வீடு வாங்கி புற நகர் பகுதியான வடபெரும்பாக்கத்தில் குடியிருந்துள்ளார் விவேக் சுகுமார். அந்த லாரி ஓட்டுனரின் அலட்சியமான வேகம் ஒரு குடும்பத்தையே நிலைகுலைய செய்துள்ளது.
அதே நேரத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலையில் உள்ள பல்லாங்குழி பள்ளங்களை சீரமைத்து மணல் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இரு சக்கர வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது..!
Comments