கீர்த்தி சுரேஷை ஐ.ஏ.எஸ் படிக்க வைக்க ரூ.41 லட்சத்தை அள்ளிக் கொடுத்த வள்ளல்..! என்ஜினியர்ன்னாலே இளிச்சவாயனா..?
முகநூலில் நடிகை கீர்த்தி சுரேஷ் பெயரில் சாட்டிங் செய்து சிவில் என்ஜினியரிடம் இருந்து மோசடியாக 41 லட்சம் ரூபாய் சுருட்டிய கேடி லேடியை போலீசார் கைது செய்துள்ளனர். கீர்த்திசுரேஷை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்து திருமணம் செய்யும் ஆசையில் பணத்தை அள்ளிக் கொடுத்தவரின் அறியாமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கீர்த்தி சுரேஷ் புகைப்படம் வைத்த முகநூலை நம்பி 41 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கலியுக வள்ளல் பரமேஸ்வர் ஹிப்பர்கி இவர் தான்..!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பரமேஸ்வர் ஹிப்பர்கி, ஹைதராபாத்தில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு, நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் மற்றும் பெயர் கொண்ட முக நூல் கணக்கில் இருந்து Friend Request வந்துள்ளது.
ஆரம்பத்தில் தான் நடித்த படங்கள் குறித்து கருத்து கேட்பது போல கீர்த்தி சுரேஷ் கணக்கில் இருந்து ஆரம்பித்த உரையாடல் நெருங்கிய நண்பர் போல் தொடர்ந்து உள்ளது. என்ஜினீயர் பரமேஸ்வரை தனது காதல் மொழிகளால் கவர்ந்து அவரை காதலிப்பது போல சாட்டிங் தொடர்ந்துள்ளது.
பரமேஸ்வர் என்ஜினீயர் என்பதால் தன்னிடம் பேசுவது கீர்த்தி சுரேஷ் தானா..? என்பதை அறிய என்ன ஆடை அணிந்திருக்கிறாய்..? உடனே அந்த போட்டோவை எடுத்து அனுப்ப சொல்லி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் பெயரில் இருந்து உடனடியாக அவர் கேட்ட புகைப்படம் மட்டுமல்லாமல், பலவிதமான அந்தரங்க புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனிலும் பரமேஸ்வரிடம் பெண் குரலில் பேசியதால் தன்னிடம் பேசுவது கீர்த்தி சுரேஷ் தான் என்று முழுமையாக நம்பி உள்ளார்.
இந்த நிலையில் தனக்கு சினிமாவில் நடிப்பதில் உடன்பாடு இல்லை எனவும் ஐஏஎஸ் படிக்க விருப்பம் உள்ளதாகவும், தனக்கு ஐஏஎஸ் படிக்க 10 லட்சம் ரூபாய் பணம் தந்தால் தேர்வு எழுதி ஆட்சியராக ஆன பின்பு திருமணம் செய்து கொள்வதாக பரமேஸ்வரிடம் ஆசை வார்த்தை கூறி பணம் கேட்டுள்ளார்.
நேரில் சந்திக்கலாம் என்று ஆசை காட்டியதை நம்பி முதற்கட்டமாக கீர்த்தி சுரேஷ் சொன்ன வங்கி கணக்கிற்கு 10 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். தினமும் இரவில் கீர்த்தி சுரேஷ் பெயரில் இருந்து புதிய அந்தரங்க புகைப்படங்கள் வருவதை பார்த்து , பரமேஸ்வரும் பதிலுக்கு தனது அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் கீர்த்தி சுரேஷ் என்ற முகநூல் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் பணம் கேட்டு கீர்த்தி சுரேஷ் முகநூல் கணக்கில் இருந்து மெசேஜ் வந்ததால், நேரில் வந்து சந்திக்கா விட்டால் பணம் தர முடியாது என்று பரமேஸ்வர் கூறியுள்ளர்.
அப்போது கீர்த்தி சுரேஷ் பெயரில் பேசி வந்த பெண், பரமேஸ்வர் அனுப்பிய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவருக்கே திருப்பி அனுப்பி வைத்து, தான் நடிகை இல்லை என்றும் தான் கேட்கும் பணத்தை தராவிட்டால் உனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த பிளாக்மெயில் பெண்ணுக்கு இருந்ததை விற்றும், வட்டிக்கு கடன் பெற்றும் 41 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் தவித்த பரமேஸ்வர் சிந்தகி நகரில் உள்ள சி.ஈ.என் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் கீர்த்தி சுரேஷ் பெயரில் போலி முகநூல் பக்கத்திலிருந்து பேசிய பெண் தாசர ஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் மஞ்சுளா என்பது தெரியவந்தது. இடிந்த சிறு வாடகை வீட்டில் வசித்து வந்த மஞ்சுளா பரமேஸ்வரை மிரட்டி பெற்ற பணத்தின் மூலமாக 100 கிராம் தங்க நகைகள், ஹூண்டாய் கார், இருசக்கர வாகனம் என பல சொகுசுப் பொருட்களை வாங்கி குவித்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் அவரது சொந்த கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதில் அடுக்குமாடி வீட்டையும் மஞ்சுளா கட்டி வருவது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மஞ்சுளாவின் மோசடிக்கு உடந்தையாக இருந்த கணவன் தலைமறைவாகி விட்டார். மஞ்சுளாவை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் மஞ்சுளாவின் கணவரை தேடி வருகின்றனர். நடிகையை மணக்கும் ஆசையில் மொத்த சொத்தையும் பறிகொடுத்த பரமேஸ்வர் வீதியில் பரிதவித்து நிற்கிறார்..!
Comments