இந்தியாவிலேயே முதன்முறையாக.. கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம்..!
இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் கடற்கரைக்கு மிக அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. கலங்கரை விளக்கம் பகுதியில் அமைய உள்ள இந்த மெட்ரோ ரயில் நிலையம், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தானியங்கி வெள்ளத் தடுப்பு கதவுகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நகரின் 128 பகுதிகளை இணைக்கும் விதமாக மொத்தம் உள்ள 118 கி.மீ-ல், 76 கி.மீ மேம்பாலமாகவும், 42 கி.மீ சுரங்கப் பாதையாகவும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில்நிலையம் கடற்கரைக்கு மிக அருகே அமையவுள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் என்பதால் பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
கடல் அரிப்பில் இருந்து காப்பதுடன், , அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெள்ளத் தடுப்பு தானியங்கி கதவுகள் சுரங்கத்தின் அடியில் அமைக்கப்பட உள்ளன.
தற்போது மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் அதிகப்படியான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்பட்டால், மெட்ரோ ரயில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களை காட்டிலும் இங்கு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கூவம், அடையாறு ஆகிய ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மெரினா கடற்கரைக்கு அருகிலும் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 110 அடி வரை ஆழமான சுரங்க ரயில் பாதையாக திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள நிலையில், மேலும் ஒரு சிறப்புமிக்க திட்டமாக கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.
Comments