எழுந்திரு லட்சு.. எழுந்திரு.. கண்ணீர் மல்க கரிணிக்கு விடை கொடுத்த பக்தர்கள்..!
புதுச்சேரி மக்களின் செல்லப்பிள்ளையான மணக்குள விநாயகர் கோவிலின் யானை லட்சுமி நடைப்பயிற்சி சென்ற போது கீழே விழுந்து உயிரிழந்தது. அதிசய தந்தம் கொண்ட கரிணிக்கு கண்ணீர் மல்க பக்தர்கள் விடை கொடுத்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு திருவணந்தபுரத்தில் இருந்து 1996 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தந்தங்களுடன் கூடிய அதிசய பெண் யானைக்குட்டி லட்சுமி..!
ஆலயத்தை வலம் வந்த பக்தர்கள் விநாயகரின் அவதாரமாக அந்த வடவையை வணங்கி மகிழ்ந்தனர். யானைக்கு சவருடன் கூடிய குளியலறை அமைத்துக்கொடுக்கப்பட்டது.
குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடும் அந்த அதவையின் கால்களுக்கு வெள்ளியில் கொலுசுகளும், தங்க டாலருடன் கூடிய சங்கிலியும் அணிவித்து அழகு பார்த்தனர் பக்தர்கள்.
வயது 32 ஐ கடந்த நிலையில் விழா நாட்களிலும், முக்கிய நாட்களிலும் அலங்காரத்துடன் புதுச்சேரி வீதியை வலம் வந்த லட்சுவுக்கு புதன்கிழமை காலை இப்படி விடிந்திருக்க வேண்டாம்..!
வழக்கம் போல பாகனுடன் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற யானை லட்சுமி திடீரென மயங்கிச்சரிந்தது. உடன் சென்ற பாகன் பதட்டமடைந்தார்.
கால் நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து லட்சுமியை எழுந்திருக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்று போனதால், யானை பாகன் மட்டுமல்ல நூற்றுகணக்கான பக்தர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மாரடைப்பு காரணமாக யானை உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர் உயிரிழந்த லட்சுமி யானையின் உடலுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல் அமைச்சர் ரங்கசாமி , அமைச்சர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலிக்கு பின்னர் கிரேனில் தூக்கிச்சென்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. உடற்கூறாய்வு நிறைவு பெற்றதையடுத்து லட்சுமி யானை கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Comments