வாட்ஸ் அப்பில் விழுந்து பேருந்துக்குள் நுழைந்து நீதிபதியால் இணைந்த காதல்..! இழுத்து பார்த்தும் பிரிக்க முடியலப்பா..!
கல்லூரி வாட்ஸ் அப் குழுவால் மலர்ந்த காதலை பிரிக்க பெற்றோர் போராடிய நிலையில் , வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மாஸிஸ்திரேட் சேர்த்து வைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் எஸ்பி கோவில் தெருவை சேர்ந்த கமலேஸ்வரனும், கேரளாவை சேர்ந்த சஜிதாவும் பொருளாதாரம் பயிலும் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் இடம் பெற்று இருந்தனர். நட்பாக பழகிய இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.
இவர்களது காதல் விவகாரம் தெரிந்து சஜிதாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் கடந்த 22 ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்ட சஜிதா கேரளாவில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்து காதலனை சந்தித்தார்.
காதல் ஜோடி இருவரும், கமலேஸ்வரனின் பெற்றோர் முன்னிலையில் பிராட்வேயில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் வைத்து மாலை மாற்றி தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
இதனிடையே சஜிதா மாயமானதாக திருச்சூர் மாவட்டம் சேலைக்கரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செல்போன் சிக்னலை வைத்து சஜிதா சென்னையில் இருப்பதை கேரளா போலீசார் கண்டறிந்தனர். சஜிதாவின் உறவினர்களுடன் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்த கேரள போலீசார் கமலேஷ்வரன் வீட்டிற்கு சென்று சஜிதாவை தேடினர்.
கேரளா போலீசாருக்கு பயந்து ஓடிய காதல் ஜோடி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பேருந்தில் தொடர் பயணம் செய்தும், இரவில் ரெயில் நிலையங்களில் படுத்து தூங்கியும் தப்பி வந்ததாக கூறப்படுகின்றது. சம்பவத்தன்று வழக்கறிஞருடன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பம் என்று திருவொற்றியூர் போலீசார் வெளியே அனுப்பி வைக்க கேரள போலீசாருடன் வந்திருந்த சஜிதாவின் உறவினர்கள் சஜிதாவை கையைப்பிடித்து இழுத்து பிரிக்க முயன்றனர்.
பெண் மாயமான வழக்கு விசாரணைக்கு சஜிதாவை தாங்கள் அழைத்துச் செல்வதாக கேரளா போலீசார் தெரிவித்தனர். ஆனால், அனுப்ப மறுத்து கமலேஸ்வரனின் வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து திருவொற்றியூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் இருந்து கேரளா போலீசார் whatsapp video call மூலம் கேரள மாஜிஸ்திரேட் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்பொழுது சஜிதாவிடம் விவரத்தை கேட்டறிந்த மாஜிஸ்திரேட், நீ யாருடன் செல்கிறாய் என சஜிதாவிடம் கேட்ட பொழுது , திருமணம் செய்து கொண்டு கணவருடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து கணவரின் வேலை குறித்த விவரங்களை கேட்டு தெரிந்து கொண்ட, கேரள மாஜிஸ்திரேட் சஜிதாவை கணவருடன் செல்வதற்கு அனுமதி அளித்தார். வாட்ஸ் அப்பில் மலர்ந்த காதல், பல்வேறு தடைகளை தாண்டி வாட்ஸ் அப் வீடியோ காலில் வந்த மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பால் இணைந்தது.
Comments