புதையல் தங்கத்தை பாதி விலைக்கு தருவதாக ஆசை வார்த்தை... செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட பலே கில்லாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதையல் தங்கத்தை பாதிவிலைக்கு தருவதாக நூதன முறையில் ஏமாற்ற முயன்ற நபர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பாரதி குமார், ஆம்பூர் பஜார் பகுதியில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலை அவரது செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர், தான் கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் விசிட்டிங் கார்டு பிரிண்ட் செய்வது தொடர்பாக உங்களை ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசி இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் தங்கள் கிராமத்தில் அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், அதற்காக குழி தோண்டியபோது முதியவர் ஒருவருக்கு புதையல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
புதையல் அனைத்தும் தங்கக் கட்டிகளாக இருப்பதால் அதனை எவ்வாறு விற்பனை செய்வது என தெரியவில்லை எனவும், அதனை உங்களுக்கு பாதி விலையில் கொடுக்கிறோம் என்றும் ஆசையாக கூறியுள்ளார். தாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து பரிசோதனை மேற்கொண்ட பின்னர் வாங்குவது குறித்து பேரம் பேசிக் கொள்ளலாம் எனவும் பாரதிகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
பாரதி குமார் தன்னிடம் இப்போது பணம் இல்லை என கூறி மழுப்ப மேலும் சில ஆசை வார்த்தைகளை அந்த நபர் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பாரதி குமார், தன்னுடைய அப்பா காவல்துறை ஆய்வாளராக பணியாற்றுவதாகவும் அவரிடம் தெரிவித்து விட்டு பார்க்க வருவதாக அந்த நபரிடம் கூறியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்த நபர் காவல் துறையில் பணியாற்றுபவர்களை நம்ப வேண்டாம், அவருக்கு தெரிவிக்க வேண்டாம் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்ததுக்கு பிறகு தந்தையிடம் கூறலாம் என்றும் அதுவரை இந்த புதையல் குறித்த விவரங்களை வேறு யாரிடம் தெரிவிக்க வேண்டாம் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்து உள்ளார். இந்த தொலைபேசி உரையாடலை கால் ரெக்கார்டிங் மூலம் பதிவு செய்த பாரதிக்குமார் தனது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் செல்போனில் பேசி ஏமாற்ற முயன்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments