தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!
மும்பையில் 166 பேரைப் பலிகொண்ட கொடூரத் தாக்குதல் நடந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தீவிரவாதத்தின் கோரமுகத்தை நினைவுகூரும் ஒரு செய்தித் தொகுப்பு...
2008 நவம்பர் 26... வழக்கமான பரபரப்புடன் இயங்கியது மும்பை மாநகரம்... ஆனால், அங்கிருந்த யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் அப்படியொரு கொடூரம் அன்று இரவில் நிகழும் என்று!
மீனவர்களைப் போல இரு படகுகளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்றனர். இரவு 9.30 மணியளவில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வந்த தீவிரவாதிகள் கசாப், இஸ்மாயில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 58 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.
104 பேர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அங்கிருந்து காமா மருத்துவமனை நோக்கி சென்ற தீவிரவாதிகளைத் தடுக்க முயன்ற, மும்பை காவல் அதிகாரிகளான ஹேமந்த் கார்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர் ஆகியோரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் நடந்த சற்றுநேரத்தில், கொலாபா, நரிமண் பாயிண்ட், கேட்வே ஆஃப் இந்தியா என அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தேறின. தாஜ் ஹோட்டலில் 31 பேரையும், ஓபராய் விடுதியில் 30 பேரையும், மற்ற இடங்களில் 40 க்கும் மேற்பட்டோரையும் ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
எங்கே என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே கடும் உயிர்சேதத்தை விளைவித்துவிட்டனர் தீவிரவாதிகள்! தாஜ் ஓட்டல், ஓபராய் விடுதி ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்ததால், கமாண்டோ படையினர் சமயோஜிதமாக செயல்பட்டு தீவிரவாதிகளை வேட்டையாடி 400க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்தனர்.
கொலாபாவில் உள்ள யூத மையத்தில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க கமாண்டோ படை வீரர்கள் சாகசத்துடன் செயல்பட்டனர். ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றில் இறங்கிய அவர்கள் 2 தீவிரவாதிகளை வீழ்த்தி 9 பேரை மீட்டனர்.
இந்த தாக்குதல் 29ம் தேதி முடிவுக்கு வந்தது. 166 பேர் உயிரிழப்புக்கு காரணமான இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு பொறுப்பேற்றாலும், தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக கஸாப் தெரிவித்தான்.
உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கஸாப்பை முன்வைத்து நீண்ட விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவனுக்கு கடந்த 2012ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
தீவிரவாதிகளை அன்றைய தினம் எதிர்கொண்ட கமாண்டோ படையினரும், போலீசாரும் நமது வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்... காட்டுமிராண்டித்தனமான கொடூரத் தாக்குதல் நடந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோரமுகம் கொண்ட தீவிரவாதத்தின் நினைவுகள் மக்கள் மனதில் இருந்து படிப்படியாக அகன்றுவிட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களோ தங்கள் உயிருக்கு உயிரான சொந்தங்களை இழந்து மீளமுடியாத சோகத்தில் இன்றும் தவிக்கின்றன.
மும்பை தாக்குதல் சம்பவம் நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. ஆயுதம் இல்லாத நிராயுதபாணிகள், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போரிடுவது என்பது முடியாத ஒன்று. தகுதி, கடின உழைப்பின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் தேசம் நம் தேசம்! ஆயுதமேந்திய கூலிப்படைகள் ஊடுருவி நாசம் விளைவிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாதம் என்பது தீமையின் உச்சம். அறிவாயுதத்தால் அதனை வெல்வோம்- இந்நாட்டை உயிரெனக் காப்போம்!
Comments