வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்
சேலத்தில் உள்ள இரு சக்கரவாகனத்திற்கு திருச்சி போக்குவரத்து போலீசார் ஆன் லைன் மூலமாக, 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக வாகன உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள நெத்திமேடு குமரகவுண்டர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவர் தனது மகன் ராஜசேகரன் பெயரில் பஜாஜ் அவெஞர் என்ற இரண்டு சக்கர வாகனத்தை வாங்கி உள்ளார். இந்த இரு சக்கர வாகனத்தின் எண் TN 81 X3901 ஆகும்.
சம்பவத்தன்று குணசேகரன் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வெளியில் சென்றார். அப்போது அவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. திருச்சி போக்குவரத்து பிரிவு போலீசார் அனுப்பி இருந்தனர். அந்த குறுந்தகவலில் சம்பந்தப்பட்ட இரு சக்கரவாகனத்திற்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சேலத்தில் இருக்கும் வாகனத்திற்கு திருச்சி போக்குவரத்து போலீசார் எப்படி அபராதம் விதித்தனர் என்பது தெரியாமல் குழம்பிபோன குணசேகரன், தான் இந்த இரு சக்கர வாகனத்தை சேலத்தில் 2 வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தி வருவதாகவும், திருச்சிக்கு பைக்கில் சென்றதே இல்லை, அப்படி இருக்க சம்பந்தமே இல்லாமல் 2 மாவட்டம் தாண்டி தற்போது திருச்சி போக்குவரத்து போலீசார் எப்படி அபராதம் விதிக்க முடியும் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
போக்குவரத்து போலீசாரின் ஆன்லைன் அபராதம் விதிப்பு குளறுபடியை உயர் காவல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாக குணசேகரன் தெரிவித்தார்.
ஏற்கனவே ஆன் லைன் மூலம் அபராதம் விதிப்பதில் பல்வேறு குளறுபடிகள் தொடரும் நிலையில் சேலத்தில் உள்ள பைக்கிற்கு திருச்சி போக்குவரத்து போலீசார் தலைகவசத்திற்காக அபராதம் விதித்து இருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
Comments