நல்லா இருந்த ஊரும் நாசம் செய்த பஞ்சாயத்தும் எல்லாமே டம்மின்னா எப்படி ? அரசு நிதி ரூ 3.76 லட்சம் புகை

0 2572

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 40 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதாக கூறி டம்மி குழாய்களை நட்டுவைத்து முறைகேடு செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஒன்னு ரெண்டு டம்மின்னாலே ஊர் முழுக்க அசிங்கமாயிரும், அம்புட்டும் டம்மின்னா ... எப்படி ? என்று ஒப்புக்கு நட்டு வைத்த குடி நீர் குழாய்களை பிடுங்கி முறைகேட்டை அம்பலப்படுத்தி உள்ளனர் ஒழிந்தியாம்பட்டு ஊராட்சி மக்கள்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒழிந்தியப்பட்டு ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தெருக்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்திற்காக, மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 752 மீட்டர் நீளத்திற்கு பைப் லைன் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

அந்த பணி முடிந்ததாக கூறப்பட்ட நிலையில் 40 வீடுகளுக்கும் மேல் நிலை குடி நீர் தொட்டியுடன் இணைக்கப்பட்ட குடிநீர் குழாயை வைக்காமல் , ஒரு சிமெண்டு கல்லை நட்டி அதில் குடி நீர் குழாய் போன்று நல்லி இல்லாத வெற்று குழாயை ஒப்புக்கு நட்டு வைத்து சென்றதாக அந்த கிராமத்து மக்கள் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

குடி நீர் இணைபே கொடுக்காமல் டம்மி குழாயை நட்டு வைத்துவிட்டு விடு தோறும் குடி நீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியதாக கூறி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா மற்றும் அவரது மகன் சக்திவேல் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த கிராமத்து மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

இந்த முறைகேடு புகார் குறித்து பஞ்சாயத்து தலைவர் சுலோச்சனா மற்றும் அவரது மகன் விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments