அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப ரீதியாக இடையூறு ஏற்படுத்திய விவகாரத்தில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது

0 5406

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் வாடிக்கையாளர்கள் 21 லட்சம் பேருக்கு கேபிள் டிவி தெரியாத வண்ணம் தொழில்நுட்ப ரீதியாக இடையூறு ஏற்படுத்திய விவகாரத்தில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜன் என்பவரது இரண்டு நிறுவனங்களிடம் அரசு ஒப்பந்தம் செய்தது.

612 கோடி ரூபாய் அளவிற்கு 36 லட்சத்து 40 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு அவற்றை நிர்வகிக்கும் சேவையையும் ராஜனின் இரண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒப்பந்தப்படி செய்ய வேண்டிய வேலைகளை ராஜனின் நிறுவனம் காலதாமதமாக செய்ததால், சுமார் 51 கோடி ரூபாய் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ராஜன், செட்டாப் பாக்சுகளுக்கு சேவை வழங்க கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி, தன் கட்டுப்பாட்டில் செயல்படும் 21 லட்சம் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கான செட்டாப் பாக்ஸ்கள் செயல்படாத வகையில் தொழில்நுட்ப ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கேபிள் சேவையில் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments