வேகமாக பரவும் 'மெட்ராஸ் ஐ'.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
தமிழகத்தில் 'மெட்ராஸ் ஐ' கண் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுய மருத்துவம் வேண்டாமென எச்சரிக்கும் மருத்துவர்கள், அந்நோய் பரவலை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் 'மெட்ராஸ் ஐ' கண் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
'மெட்ராஸ் ஐ' பாதித்த நபரை பார்த்தாலே நமக்கும் அந்த பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில், அதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த கண் பாதிப்பு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படுவதாகவும், கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண்ணின் கருப்பு நிற படலத்தின் மீது அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், மங்கலான பார்வை ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல், வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம் ஏற்படுவது போன்றவை, 'மெட்ராஸ் ஐ' பாதிப்பில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
'மெட்ராஸ் ஐ' பாதித்தவர்கள் தாமாக மருந்தகங்களில் கண் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், உரிய பரிசோதனைக்கு பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
துண்டுகள், தலையணை உறைகள், ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் மூலம் 'மெட்ராஸ் ஐ' பாதித்த நபரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதால், பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கண்கள், கைகளை கழுவ வேண்டும் என்றும் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்களுக்கு காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் புதிய லென்ஸ்களை அணிய வேண்டும் என்றும் கண்பாதிப்பில் இருந்து மீண்டபின் அதே லென்சை பயன்படுத்தக் கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments