திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சினிமா துறையில் தற்போது, போதிய கதை வசன கர்த்தாக்கள் இல்லாத இந்த காலக்கட்டத்தில், தனது தனித்துவமான கதை வசனத்தால் மக்களை ஈர்த்து, 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதைவசனம் எழுதிய வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று காலமானார்.
திருவாரூரை சேர்ந்த ஆரூர்தாஸ் 1958ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரித்த வாழவைத்த தெய்வம் படத்திற்கு கதை வசனம் எழுத ஆரம்பித்து, தனது வசன ஆற்றலால் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்தார்.
ஆனந்தா, நான் என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்… அதில் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்க வேண்டும் என்று பாசமலர் படத்தில் அவர் எழுதிய வசனம் இன்றளவும் யாராலும் மறக்கமுடியாத வசனமாக இருக்கிறது.
ஆரூர்தாஸ் கடைசியாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கும் வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் தொடங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை முக்கிய பிரபலங்களிடம் நட்பு பாராட்டிய ஆரூர்தாஸ்க்கு கடந்த ஜூன் மாதம் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார்.
மறைந்த ஆரூர்தாஸ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Comments