மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் : கர்நாடக காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மங்களூரில் ஆட்டோவில் நிகழ்த்தப்பட்டது குண்டுவெடிப்பு என்றும், இது தன்னிச்சையானது அல்ல மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
மங்களூரில் ஆட்டோவில் குண்டு வெடித்து சிதறிய இடத்தை கர்நாடக காவல்துறை ஏடிஜிபி அலோக் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே தாக்குதலின் நோக்கம் என்றும், அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கோவை உக்கடத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கும், இதற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கர்நாடக டிஜிபி பிரவின் சூட், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இது தன்னிச்சையாக நடந்த சம்பவம் இல்லை என்றும்,
மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஜனேந்திராவும், இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆட்டோவில் பயணித்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்றும், எனினும் விசாரணை முடிந்த பிறகே அனைத்தையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
காயமடைந்த அந்த நபர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொம்மை, தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இதில் தொடர்புள்ளதா என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும் எனவும் பதிலளித்தார்.
Comments