காவல் நிலையம் செல்வதே ஆபத்தாக உள்ளது மருத்துவர்கள் கெஞ்சல்..! முன் ஜாமீனை மறுத்த நீதிமன்றம்
கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி இரு மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. காவல் நிலையம் செல்வதே ஆபத்தாக உள்ளது என்று மருத்துவர்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்த வழக்கில் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி இரு மருத்துவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் தற்போது தான் நடந்துள்ளது என்றும், காவல் துறையினர் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
தொடர்ந்து, மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர் விளக்கினர். அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு, காலில் வலி இருப்பதாக மாணவி கூறியிருந்தால் உடனடியாக அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவர் அவ்வாறு தெரிவிக்கவில்லை. என்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகளை இதற்குமுன் வெற்றிகரமாக செய்திருப்பதாகவும், அதேவேளையில், மாணவி பிரியா உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, எங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். சாட்சிகளை கலைக்க மாட்டோம். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம்" என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.
தற்போது விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து துன்புறுத்துவதாகவும், மருத்துவர்கள் சரணடைய தயாராக இருப்பதாகவும், தெரிவித்த அவர்கள் தரப்பு வழக்கறிஞர், இந்த சம்பவம் அரசியலாக்கப்பட்டு, அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதால் காவல் நிலையத்துக்கு செல்வதே ஆபத்தாக உள்ளதாக தெரிவித்தார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சம்பவம் குறித்து விசாரித்த மருத்துவர் குழு அளித்த அறிக்கையில், மனுதாரர்கள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, அறிக்கையை தாக்கல் செய்தார்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், மனுதாரர்கள் கவன குறைவாக செயல்பட்டார்களா? இல்லையா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் இருவாரங்களில் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்வதாக குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதுவரை மருத்துவர்கள் இருவரையும் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சரணடைந்தால் காவல் துறையினர் கவனித்துக் கொள்வர் எனத் தெரிவித்தார்
பின்னர் மருத்துவர்களின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என்றும் இரு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
Comments