அய்யா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா ? மழை நீர் கால்வாயில் கழிவு நீர்..! தொழிற்சாலைகள் மீது என்ன நடவடிக்கை?

0 3631

மழை நீரை சேமித்து சுத்திகரித்து குடி நீருக்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கோடு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டு வரும், மணலி புது நகர் மழை நீர் கால்வாயில், தொழிற்சாலை கழிவுகள் திறந்துவிடப்பட்டதால் மழை நீர் கால்வாய் கருப்பு நிறமாகி துர்நாற்றம் வீசும் கழிவு நீர்கால்வாயாக மாறி உள்ளது...

சென்னை மாநகராட்சியின் 15 வது வார்டுக்குட்பட்ட மணலி புது நகரில் மழை நீரை வடியவைக்கவும், அந்த மழை நீரை ஏரி போல கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் கரைகளை உயர்த்தி தேக்கி வைத்து , அதனை சுத்திகரித்து மணலி புது நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடி நீராக வழங்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு புறமும் காங்கிரீட் கரைகள் கொண்ட பிரமாண்ட கால்வாய் அமைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த சில தினங்களாக இந்த கால்வாய் வழியாக மழை நீர் கொசஸ்தலை ஆற்றுக்கு சென்ற நிலையில், விச்சூர் பகுதியில் செயல்படும் 3 ரசாயன தொழிற்சாலைகள், 2 பெயிண்ட் தொழிற்சாலைகள் மற்றும் இரு இரும்பு உருக்கு ஆலை ஆகியவற்றில் மறு சுழற்சிக்காக தேக்கிவைக்கப்பட்டிருந்த கழிவு நீர் இந்த கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மழை நீரோடு அந்த கழிவுகள் கலந்து சென்ற போது வெளியில் தெரியாத நிலையில், தற்போது மழையும் நின்று, மழை நீர் கால்வாயில் இருந்து நீர் வடிவதும் முற்றிலும் நின்று விட்டதால் தொழிற்சாலை கழிவுகள் கருப்பு வண்ண சாக்கடை போல துர்நாற்றத்துடன் மழை நீர் கால்வாயில் செல்வதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பிரதாயத்துக்கு தொழிற்சாலைகளில் சோதனை நடத்திவிட்டு எந்த தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் என்று கண்டுபிடிக்க இயலவில்லை என்று சென்று விட்ட நிலையில், ரசாயனம் கலந்த நீரை குடித்த நாய் ஒன்று இறந்து விட்டதாக அப்பகுதி வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே விச்சூரில் இருந்து வரும் இந்த மழை நீர் கால்வாயின் ஒரு பகுதியை பட்டா நிலம் என்று கூறி சிலர் ஆக்கிரமித்து கண்டெய்னர் யார்டு அமைத்துள்ளதால், மழை நீர் வடிவதற்கு இடையூறாக இருப்பதாகவும், அவர்களின் பட்டா குறித்து முறையாக விசாரித்து காங்கிரீட் தடுப்பு சுவருடன் மழை நீர் வடிகால் அமைத்து தருவதோடு, இதில் கழிவு நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது எழில் நகர் வாசிகளின் கோரிக்கையாக உள்ளது

மக்களின் நலனுக்காக அரசு புதிய திட்டங்களை வகுத்தாலும், கையூட்டுக்கு ஆசைப்படும் சில அதிகாரிகள் தொழிற்சாலைகளை விதியை மீற அனுமதிப்பதால் அந்தப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments