மூக்கு அறுவை சிகிச்சையால் இரு கண்பார்வை பறிபோனது அரசு மருத்துவமனை அலட்சியம்..! கடலூரில் கண்ணை கட்டி போராட்டம்

0 11371

கடலூர் அரசு மருத்துவமனைக்கு மூக்கில் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு இரு கண்களும் பறி போனதாக புகார் எழுந்துள்ளது. கண்பார்வை இழந்த பெண்மணிக்காக கண்களைக் கட்டி நடந்த போராட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கடலூர் சான்றோர் பாளையத்தை சேர்ந்தவர் உமாவதி . இவர் கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த அறுவை சிகிச்சை முடித்த பிறகு நான்கு முதல் ஐந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில் , அவருக்கு கண்பார்வை தெரியாததால் ஒரு மாத காலம் இவரை மருத்துவமனையில் வைத்தே மருத்துவர்கள் மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர் அதன்பிறகு இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அப்போது உமாவதி, தனக்கு பார்வை தற்போது வரை தெரியவில்லையே ஏன் ? என்று டாக்டரிடம் கேட்டுள்ளார். மருத்துவர்கள், ரத்தக்கட்டு காரணமாக அப்படி உள்ளதாகவும் காலப்போக்கில் கண்கள் சரியாகிவிடும் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் இதுவரை கண்கள் இரண்டும் தெரியவில்லை என்றும் இதனால் கண் பார்வை பாதிக்கப்பட்ட அவர் உறவினர்களுடன் சென்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுஅளித்தார். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் , சுகாதாரத் துறை உயரதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள், கடந்த மாதத்தில் ஒரு சிறுவனுக்கு கையில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஒரு பெண்ணுக்கு வயிற்றுடன் சேர்த்து குடலை வைத்து தைத்த சம்பவம் நடைபெற்றதாகவும், இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் அளித்த நிலையில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.

தற்போது மூக்கு ஆபரேஷன் செய்த பெண்ணுக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோயிருக்கும் சம்பவத்தால் மருத்துவர்களின் அலட்சியத்தை கண்டித்து கண்களை கட்டிக் கொண்டு போராட்டதில் ஈடுபட்டனர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக பணிபுரிந்து வரும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது .

இது குறித்து பார்வை பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் மூக்கில் உள்ள சதையை அகற்றுவதற்கான ஆப்ரேஷன் செய்து முடித்த பிறகு தன்னுடைய இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனதாக தனியார் மருத்துவமனையில் சென்று விசாரித்த போது கண்ணிற்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அங்குள்ள மருத்துவர்கள், இதற்காக மீண்டும் ஆபரேஷன் செய்தால் கூட ஒரு கண்ணில் மட்டுமே பார்வை வரும் எனகூறியதாக உமாவதி தெரிவித்தார்.

அதே நேரத்தில் பெண்மணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏதாவது தவறு நடந்திருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் ரமேஷ்பாபு தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments