அரை மயக்கத்தில் திருமணம்.. ஆபாச வீடியோ மிரட்டல்.. 17 வயது சிறுமி தற்கொலை..! உடலை வாங்க மறுத்து போராட்டம்
பெரம்பலூர் அருகே மயக்க மருந்து கொடுத்து ஆட்டோவில் கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்ட நிலையில் , ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக இளைஞரின் உறவினர் மிரட்டியதால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்ற இளைஞர் காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 31 ந்தேதி சிறுமியை ஆட்டோவில் கடத்திச்சென்று, சமயபுரம் கோவிலில் வைத்து கட்டாய தாலிகட்டிய நிலையில் இளைஞரிடம் இருந்து சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஓடைக்கு தணியாக துணி துவைக்க சென்ற சிறுமியை பின் தொடர்ந்த மணியின் உறவினர் மாரிமுத்து என்பவர் செல்போனில் உள்ள ஒரு வீடியோவை அந்த சிறுமியிடம் காண்பித்துள்ளார் . அதனை பார்த்த சிறுமி கடும் அதிர்ச்சி அடைந்தார். மயக்க நிலையில் இருந்த சிறுமியுடன் மணி நெருக்கமாக இருப்பது போன்று இருந்த அந்த வீடியோவை காண்பித்த மாரிமுத்து, 18 வயது ஆனவுடன் ஒழுங்கு மரியாதையாக மணியிடம் வந்து விட வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து கடும் மன உளைச்சலுக்குள்ளான அந்த சிறுமி, வீட்டிற்கு சென்று கடிதம் எழுதி வைத்து விட்டு, களைக்கொல்லியை எடுத்து குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இரு தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவி எழுதி வைத்துள்ள கடிதத்தில் தன்னை ஆட்டோவில் கடத்திச்சென்றதாகவும் , அரை மயக்கத்தில் இருந்த தனக்கு தாலி கட்டிவிட்டு, விருப்பபட்டு சென்றதாக மிரட்டி சொல்ல வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் தவறாக இருக்கும் படத்தை காண்பித்து மீண்டும் தங்களுடன் வந்துவிட வேண்டும் இல்லையென்றால் இண்டர் நெட்டில் படத்தை போட்டு விடுவோம் என்று மிரட்டுவதாக வேதனை தெரிவித்துள்ள அந்த சிறுமி, தனது மரணத்துக்கு ராணி, ராமசாமி ,மாரி முத்து , மணி ஆகியோர் தான் காரணம் என்று கூறி இருக்கின்றார்.
சிறுமி கடத்திச்செல்லப்பட்ட சம்பவத்தில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் , தற்போது சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டிருக்க மாட்டாள் என்று உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
இதற்கிடையே மரணத்துக்கு காரணமானவர்கள் என சிறுமி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் மாதர் சங்கத்தினரும் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முதலில் ராமசாமி, மாரிமுத்து ஆகிய இருவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments