கால்பந்து வீராங்கனை மரணம்.. அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் பறிபோன உயிர்..!
சென்னையில் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால், கால்பந்து வீராங்கனை உயிர் பறிபோனது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயதான கால்பந்து வீராங்கனை பிரியா, ராணி மேரி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். சிறுவயது முதலே கால்பந்து போட்டியில் ஆர்வம் கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
சமீபத்தில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது, அவரது வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அவரது காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்ததை அடுத்து, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், வீட்டின் அருகேயுள்ள பெரம்பூர் பெரியார்நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் பிரியாவுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதற்கு பிறகும் மாணவிக்கு காலில் வலி இருந்ததால், அவர் கடந்த 10 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இறுக்கமாக கட்டு போடப்பட்டதால், ரத்த ஓட்டம் தடைபட்டதும், இதனால் கால் வீங்கி தசைகள் அழுகிடும் நிலையில் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், கடந்த சனிக்கிழமை பிரியாவின் கால் அகற்றப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு பிரியாவின் உடல் மோசமடைந்து, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், சக கால்பந்து வீராங்கனைகளும் மருத்துவமனை முன்பு திரண்டு கதறி அழுதது, காண்போரை கலங்க வைத்தது.
கால்பந்தாட்ட போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் வாங்கிய பிரியா, தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாகவும் இறப்புக்கு காரணமாகிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் விளக்கமளித்தார். பிரியாவிற்கு காயம் எவ்வாறு உள்ளது என்பதை சோதனை செய்தபோது, மேலும் காயம் அதிகரித்திருப்பது தெரியவந்ததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தசை கிழிந்ததால் அதிலிருந்து வெளியே வரக்கூடிய திரவ வடிவிலான மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேற தொடங்கியதாகவும், சிறுநீரகம் வழியாக திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால், முதலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, பின்னர் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து மாணவி உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிக்கு கவனக்குறைவுடன் சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மாணவியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் இயற்கைக்கு மாறானது என, பெரவள்ளூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் மாணவி பிரியாவின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும் போது, அங்கு திரண்ட பிரியாவின் தோழிகள் மற்றும் உறவினர்கள், பிரியாவின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தி, ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து பிரியாவின் உடல், இறுதிச்சடங்கிற்காக வியாசர்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
Comments