ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் இன்று தொடக்கம்... பிரதமர் மோடி, அதிபர் ஜோபைடன், சீன அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு..
இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இன்று தொடங்குகிறது. இதற்காக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி 20 நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலித்தீவில் உள்ள நுஸா துவாவில் இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடிக்கு பாலி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தோனேஷிய பிரதமர் மற்றும் அதிகாரிகள் பிரதமரை விமானநிலையத்தில் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே பிரதமர் மோடியை வரவேற்க இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார். மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேஷிய அதிபர் ஜோகோவிடோடோ உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க உள்ளதால், மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேஷிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக்கொள்கிறார்.
பாலியில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் பிரதமர் மோடி, இந்தோனேஷியாவில் இருக்கும் 45 மணி நேரத்தில் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
Comments