காபி சாப்பிடுற கேப்புல 100 லிட்டர் டீசல் அபேஸ்..! தவிக்கும் ஓட்டுனர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காபி சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்ட ஈச்சர் மினிலாரியில் இருந்து 100 லிட்டர் டீசல் களவாடப்பட்டதால், வாகனத்தை தொடர்ந்து இயக்க இயலாமல் ஓட்டுனர் ஒருவர் நடுவழியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் தூக்க கலக்கத்தை போக்க சாலையோர ஓட்டல்களில் வாகனத்தை நிறுத்தி காபி டீ சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.
மற்ற இடங்களில் வாகனத்தை நிறத்தினால் தார்பாயை கிழித்து சரக்குகளை களவாடிச்சென்று விடுவதால் ஓட்டுனர்கள் சாலையோரத்தில் பார்க்கிங் வசதியுடன் உள்ள உணவகங்களில் வாகனத்தை நிறுத்திச் செல்கின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஈச்சர் மினி லாரி ஓட்டுனர் ஒருவர், ரமாஸ் சைவ உணவகத்தில் காபி சாப்பிட வாகனத்தை ஓட்டல் பார்க்கிங்கில் நிறுத்தி உள்ளார்.
காபி குடிக்கச் சென்ற ஓட்டுனர் சிறிது நேரம் கழித்து வந்து வாகனத்தை கிளப்பி சர்வீட் சாலைக்கு கொண்டு வந்துள்ளார். வாகனம் நடுவழியிப் நின்றது.
இறங்கிச்சென்று பார்த்தால் டேங்கின் மூடி திறந்து கிடந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் டீசலை திருடிச்சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்ட போது , தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்து விட்டதால் சாலையில் நின்று புலம்பியபடியே வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை என்பதால் சக வாகன ஓட்டுனர்கள் உஷாராக இருக்கும்படி சம்பந்தப்பட்ட மினி லாரி ஓட்டுனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments