தலையில் ஹெல்மெட் இருந்தும் சாலை சரியில்லாததால் zomato ஊழியர் பலி..! சவக்குழி சாலைகள் சீரமைக்கப்படுமா ?
சென்னை மணலி கேனால் சாலை சந்திப்பில் சாலை பள்ளத்தில் இரு சக்கரவாகனத்தில் தவறி விழுந்த சொமோட்டோ ஊழியர் மீது கண்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தலைகவசம் அணிந்திருந்தும் சரியில்லாத சாலைக்கு பலியான உயிர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் 2 வது தெருவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் முகமது அலி. இவர் zomatoவில் உணவு டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சனிக்கிழமை மதியம் உணவு டெலிவரி செய்வதற்காக ஹெல்மெட் அணிந்தபடி , தனது பல்சர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு கார்கில் நகர் பக்கிங் கால்வாய் சாலை வழியாக சென்றார். மணலி - துறைமுகம் விரைவு சுங்கச் சாலையில் இடது பக்கமாக திரும்பியபோது, சாலையில் இருந்த குழியால், அவரது இரு சக்கரவாகனம் தடுமாறி கீழே விழுந்த நிலையில் அவரை முந்திக் கொண்டு அதே திசையில் திரும்பிய கண்டெய்னர் லாரி சாலையில் விழுந்த முகமது அலியின் தலை மீது ஏறி இறங்கியது.
இதில் தலைக்கவசம் உடைந்து நொறுக்கியதோடு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முகமது அலி பரிதாபமாக பலியானார்.
உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தும், வந்து சேர்வதற்கு 1 மணி நேரம் ஆனதால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இறங்கினர்.
சம்பவ இடத்துக்கு வந்த சாத்தாங்காடு போலீசார் , முகமது அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அவரது சடலத்தை தூக்குவதற்காக முயன்ற போது அவரது கை உணவுப்பையை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்து போலீசார் மட்டுமல்ல கூடியிருந்தவர்களும் கலங்கிப் போயினர்.
இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் மாவட்டம், கோட்டக்கச்சேரியை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெல்மெட் அணிந்த நிலையிலும் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புக்கு சவக்குழிகள் போல மாறியுள்ள சாலைகளே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில தினங்கள் பெய்த மழைக்கே சாலைகள் பொத்தல் விழுந்து காணப்படுவதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாகனம் ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால் இந்த விபத்து தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
இது தொடர்பாக விளக்கம் அளித்த அப்பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, இன்னும் ஒரு மாதத்தில் சாலைகள் முழுவதையும் புதிதாக அமைத்து தருவதாக நெடுஞ்சாலை ஆணையம் தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.
Comments