180 டிகிரி சுழலும் நாற்காலி- வைஃபை வசதி.. சீட்டுக்கு அருகே சார்ஜிங் போட்டுக்கலாம்.. வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்..!
சென்னை - மைசூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.
இந்தியாவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தேபாரத் ரயில்கள் வடமாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தென்னிந்தியாவிற்கான முதல் வந்தே பாரத் ரயிலின் சேவையை பிரதமர் மோடி பெங்களூருவில் தொடங்கி வைத்தார்.
வெள்ளியன்று காலை 10 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில், சுமார் 75 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவில், சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது.
சென்னை - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் பெட்டிகள், தமிழகத்தில் உள்ள ஐசிஎப்-ல் தயார் செய்யப்பட்டது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்ட வந்தே பாரத் ரயில், Chair car, Executive Car என்ற இரண்டு வகுப்புகளில், ஆயிரத்து 128 இருக்கைகளுடன் 16 பெட்டிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Executive Car பெட்டிகளில் பயணிகள் இயற்கையை ரசித்தவாறு செல்ல, இருக்கைகள் 180 டிகிரி சுழலும் சொகுசு நாற்காலிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
அவசர காலங்களில் ரயில் பயணிகள், ஓட்டுனர்களிடம் நேரடியாக தகவல்களை பரிமாறும் வகையில் Talk back வசதியுடன் கூடிய கருவி, ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. வண்டியை விரைந்து நிறுத்த ஏதுவாக ஒவ்வொரு பெட்டிகளிலும் நான்கு அழுத்தும் பொத்தான்கள் ((press buttons)) உள்ளது.
ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு கண்காணிப்பு கேமராக்கள், நான்கு அவசரகால வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் எங்கு செல்கிறது, கதவு எவ்வாறு திறக்கும் என்பதை பயணிகளுக்கு எளிதில் தெரிவிக்கும் வகையில் ஒலி பெருக்கிகளும், LCD திரையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் 650 மில்லி மீட்டர் அளவுக்கு தண்ணீர் தேங்கினாலும் தடை இன்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வைஃபை வசதி, தானியங்கி கதவுகள், பெட்டியின் வெப்பநிலைக்கு ஏற்ப தானியங்கி முறையில் வெப்பநிலையை மாற்றி கொள்ளும் நவீன குளிர்சாதன வசதி, மடிக்கும் தன்மையிலான இருக்கைகள் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - மைசூரு இடையே, தண்டவாளங்களில் பெரிய அளவில் தடுப்பு வேலிகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி, 75 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் சென்னையிலிருந்து மைசூரு பயணிக்க chair car வகுப்பில் ஆயிரத்து 200 ரூபாயும், executive car வகுப்பில் பயணிக்க இரண்டாயிரத்து 295 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments