ராஜீவ்காந்தி கொலை வழக்கில் - நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி, 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்பட 6 பேரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழக அமைச்சரவை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க காலதாமதம் ஆனதால், அதனைகுறிப்பிட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ், தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கடந்த மே 18-ஆம் தேதி, பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனையடுத்து தங்களையும் விடுவிக்க கோரி, நளினி, ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசை பதில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.
தொடர்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த இரு தனித்தனி பிரமாணப் பத்திரத்தில், 2018-ல் மாநில அரசு நிறைவேற்றிய பரிந்துரையை, கடந்த 2021-ம் ஆண்டு குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார் என தெரிவித்தது.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 6 பேருக்கும், பேரறிவாளன் தீர்ப்பு பொருந்தும் என கூறி அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
Comments