இறந்த பெண் உயிர்த்தெழ ஜெபம் செய்து ஏமாந்த போதக ஊழியர்கள்..! மதுரையில் சம்பவம்

0 14131

மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் மூன்று நாட்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அடுத்த சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது மனைவி மாலதி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

பாலகிருஷ்ணன் தனியார் ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்களில் மூத்தவர் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இளையவர் சிவசங்கர் தேனி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மூன்றாமாண்டு படித்து வருவதாக கூறுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு-க்கு மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் பாலகிருஷ்ணனின் மனைவி மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி 8 ந்தேதி அதிகாலை உயிரிழந்தார்.

மாலதியின் உடலை ஆம்புலன்சு மூலம் வீட்டிற்கு கொண்டு சென்ற குடும்பத்தினர், உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அளித்த தகவலின் படி எஸ் எஸ் காலனி போலீஸார் அங்கு சென்று விசாரித்த போது, உறவினர்கள் சிலர் வர காலதாமதமாவதால் சடலத்தை வீட்டில் வைத்திருப்பதாக கூறி சமாளித்துள்ளனர்.

மூன்றாவது நாளும் உடலை நல்லடக்கம் செய்யாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த நிலையில், மீண்டும் அக்கம்பக்கத்தினர் மிகவும் அச்சத்துடன் அளித்த புகாரின்பேரில் விரைந்த போலீசார் எச்சரித்த போது, போலீசார் வீட்டிற்குள் வந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து விடுவோம் என மிரட்டியதோடு, யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் வீட்டை பூட்டி கொண்டு வீட்டினுள் மகன்களுடன் ஜெப பிரார்த்தனையில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், மாலதியின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் இருந்து உறவினர்கள் சிலரை மதுரைக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் வழக்கமாக செல்லும் சர்ச்-ல் உள்ள பாதிரியாரும், உறவினர்களும் சிறிது நேர கூட்டாக ஜெபம் செய்த பின்னர் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச்சென்றனர்.

போலீஸார் விசாரணையில், பாலகிருஷ்ணன், பிரார்த்தனையின் மூலமாக இறந்து போன தனது மனைவி மாலதியை உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே 3 நாள் வைத்து ஜெபம் செய்ததாகவும், மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் வைத்திருந்ததும், அவர் உயிர்தெழாததால் ஏமாற்றத்துடன் அடக்கம் செய்ய எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறிய தனது மனைவியை மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என்று
மருத்துவம் படித்த இரு மகன்களையும் நம்பவைத்து வீட்டை பூட்டிக் கொண்டு ஜெபபிரார்த்தனை நடத்தியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments